பு.கொணலாவடி கிராமத்தில் அம்மன் கோவில் தேர் திருவிழா
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலாவடி கிராமத்தில் உள்ள மன்னாத ஈஸ்வரர், பச்சைவாழி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பெண் அழைப்புடன் சுவாமிக்கு தாலி கட்டுதல் நடந்தது. பகல் 12:30 மணிக்கு வாமுனீஸ்வரருக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ரத உற்சவம் துவங்கியது. கோவில்களை சுற்றி வலம் வந்த தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மன்னாத ஈஸ்வரர், பச்சைவாழியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் கொணலாவடி, மூலசமுத்திரம், நத்தகாளி, ஏமம், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.