சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
செஞ்சி: செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அங்குரார்பணமும், ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்தனர்.
நேற்று காலை 6:30 மணிக்கு உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்து வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தின் அருகே கொண்டு வந்தனர். தொடர்ந்து விசேஷ பூஜையுடன் 7:20 மணிக்கு கருட கொடியேற்றம் நடந்தது. மலைமீது இருந்து கீழே வந்த ரங்கநாதர் சூர்ய பிரபையில் வீதி உலா வந்தார். இரவு ஹம்சவாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. பூஜைகளை நாரிசிம்மன் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்தனர். இன்று சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும், நான்காம் நாள் சேஷவாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனும் கருட சேவை 26ம் தேதி இரவு நடக்க உள்ளது. தொடர்ந்து 27ம் தேதி யானை வாகனத்தில் சாமி ஊர்வலமும், 28ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.