உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு

சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: காடாம்புலியூரில், சிவலிங்கத்தை அகற்றுவதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, காதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், சிறிய கோவில் இருந்தது. இங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், சிவலிங்கத்தை அகற்ற வேண்டும் எனவும் இந்திய கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால், சிவலிங்கத்தை அகற்றுவதாக, வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில், சிவலிங்கம் அகற்றப்படாததால், இந்திய கம்யூ.,  சார்பில், இன்று (25ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதனைத் தொடர்ந்து, நேற்று (24ம் தேதி), தாசில்தார் விஜய் ஆனந்த் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம் சிவலிங்கத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலர் திருமாவளவன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சிவலிங்கத்தை அகற்றி, வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !