உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி : சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபா ஆகிய கோவில்களில், நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி யில் உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தில் புதிதாக வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

120 கலசங்கள்: இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 120 கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு, யாக பூஜை, அவபிருத யாகம், கலச உத்தாபானம், காலை, 8:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், தொடர்ந்து கோவில் கோபுரம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், கலசநீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில், ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமி, (தொண்டை மண்டல ஆதினம், 232ம் பட்டம்) முன்னாள் முருகன் கோவில் சேர்மன் ஈஸ்வரப்பன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கணபதி ஹோமம்:
அதே போல், திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவிலின் நுழைவு வாயில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, காலை, 10:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நுழைவு வாயில் மற்றும் மூலவர் சாய்பாபா, பாலமுருகர், விநாயகர், கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும், கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !