நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்
சிவகங்கை, சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயில் வைகாசி உற்சவ விழா மே 30 கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 31 முதல் ஜூன் 4 வரை அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளினார். ஜூன் 5 இரவு உள்வீதியில் தங்கரத புறப்பாடும், வெளிவீதியில் அன்னவாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை களியாட்ட கண்ணத்தாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரத புறப்பாடும் நடந்தன. நேற்று காலை 10:20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இரவு வெள்ளி ரதம், வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூன் 8) காலை பால்குடம், பூக்குழி இறங்குதலும், இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் முயல்குத்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.