எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்தோத்ஸவ விழா
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோத்ஸவ விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 8 காலை மூலவர், உற்சவர் மற்றும் கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மேல் பெருமாள் கத்தி, ஈட்டி, வளரி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். வாணவேடிக்கை, மேள, தாளத்துடன் பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க வைகை ஆற்றில் 5:00 மணிக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10.25 மணிக்கு மஞ்சள் பட்டிணம் மண்டகப்படியில் இருந்து பெருமாள் குதிரை வாகனத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆற்றுப்பாலம், பெரியகடைவீதி, பெருமாள் கோயில் படித்துரை வழியாக வைகை ஆற்றில் திருச்சப்பரத்தில் அருள்பாலித்தார். மேலும் எமனேஸ்வரம், ஜீவாநகர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரவு 11:00 மணிக்கு மேல் வண்டியூர் கருப்பணசாமி கோயிலை அடைந்தார். இன்று சேஷ வாகனத்தில் பெருமாள் மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 14 ல் காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் கோயிலை அடைவார். அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்திருந்தனர்.