உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயராகவ பெருமாளால் பெருமை பெறும் திருப்புட்குழி

விஜயராகவ பெருமாளால் பெருமை பெறும் திருப்புட்குழி

திருப்புட்குழி : திருப்புட்குழி கிராமத்திற்கு, விஜயராகவ பெருமாள் கோவிலால், பெயரும், புகழும் கிடைத்துள்ளது என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், 1,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊரில், பழமையான மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இத்தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்குள்ள கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சுவாமி தரிசனத்திற்கு மக்கள் வருகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி ஒவ்வொரு அமாவாசை அன்றும் பெண்கள் அங்கு தங்கி செல்கின்றனர். கோவிலில் கொடுக்கும் வறுத்த பச்சை பயறை ஈரச்சேலையில் கட்டி மறுநாள் அவிழ்த்து பார்த்தால் முளைத்திருக்கும் அதிசயம், இன்னும் அந்த கோவிலில் நடந்து வருகிறது.

இந்த கிராமத்தின் முக்கிய தொழில் நெசவு; அதற்கு அடுத்து விவசாயம். தற்போது நெசவு தொழில் நலிந்து விட்டதால் பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த ஊராட்சியின் ஒரு பகுதியாக, பாலுசெட்டிசத்திரம் கிராமம் உள்ளது. இந்த இரு ஊர்களுக்கும் நடுவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த பகுதி மக்களுக்கு மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, வங்கிகள், பாதுகாப்புக்கு காவல்நிலையம் என, வசதிகள் இருக்கின்றன. திருப்புட்குழி மக்கள் அனைத்து தேவைக்கும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, பாலுசெட்டிசத்திரம் செல்ல வேண்டும். இதனால் சாலை விபத்துகள் நடக்கின்றன. வெளியூர்களில் இருந்து அங்குள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க கிராம மக்கள் அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியுள்ளனர். அதுபோல, இங்கிருந்து, சென்னை, வேலுார் போன்ற நகரங்களுக்கு போக்குவரத்து வசதி அதிகம் இல்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, வி.ரமேஷ் என்பவர் கூறியதாவது: எங்கள் ஊர், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்தாலும் எந்த பயனும் இல்லை. முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நிற்பதில்லை. கடந்த, 2014 முதல், இதுவரை, 392 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர்; பலர் கை, கால்களை இழந்துள்ளனர். இது போன்ற சாலை விபத்துகள் நடக்காமல் தவிர்க்க, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !