உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாற்றில் 15 கிராம கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வார் தரிசனம்

செய்யாற்றில் 15 கிராம கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வார் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், 15 கிராமங்களிலிருந்து பங்கேற்கும் கருட சேவை பெருவிழா, நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.

வைணவ நெறியை பின்பற்றி, வைணவத்திற்கு பெருமை சேர்த்த நம்மாழ்வாரை, அவதார நாளாக கொண்டாடும் விதமாக, 15 கிராமங்களில் உள்ள பெருமாள்கள், ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கருட சேவை பெருவிழா செய்யாற்றின் பெருநகர் பகுதியில் ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தின் மறுநாள் நடந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு கருட சேவை உற்சவம் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நேற்று அதிகாலை, 3:00 மணி வரை நடந்தது. இதில், கூழமந்தல் பேசும் பெருமாள், பெருநகர் வரதராஜ பெருமாள், மாணாம்பதி சீனிவாச பெருமாள், தண்டரை லட்சுமி நாராயணப்பெருமாள், தேசூர் புண்டரி காட்சிப்பெருமாள், இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாச பெருமாள், சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேச பெருமாள், சோழவரம் காரிய மாணிக்கப்பெருமாள், இளநகர் சீனிவாசப்பெருமாள், கூழமந்தல் பெண்ணை வெங்கடசேப்பெருமாள், தேத்துறை சீனுவாச பெருமாள், செல்லப்பெரும்புலிமேடு வெங்கடேச பெருமாள், மாங்கால் வெங்கடேச பெருமாள், மடிப்பாக்கம் சீனுவாச பெருமாள் ஆகியோர் மேள தாளத்துடன் வாண வேடிக்கையுடன் கருட வாகனத்திலிருந்து இறங்கி, செய்யாற்றில் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு நம்மாழ்வார் எழுந்தருளி, அனைத்து சுவாமிகளுக்கும், மாலை மரியாதை செய்தார். பின்னர் தனித்தனியாக மங்களாசனம் செய்தனர். தீபாராதனை நடந்த பின், சுவாமிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !