கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை
நாராயணவனம்: நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று முன்தினம், கருட வாகனத்தில், சுவாமி வீதியுலா எழுந்தருளினார். நாளை தேர் திருவிழா நடக்கிறது. நகரி அடுத்த, நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 6ம் தேதி, கொடியேற்ற்த்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருளுகிறார்.
நேற்று முன்தினம், சனிக்கிழமை இரவு, கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். கருட வாகன தரிசனம், ஆண்டு முழுவதும் பெருமாளை தரிசனம் செய்தது போன்ற பலனை தரும் என்பதால், திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர். கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்ய, நாராயணவனம், புத்துார், கீளகரம், நகரி மற்றும் தமிழகத்தின் பொதட்டூர்பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான, நாளை காலை, தேர் புறப்பாடு நடக்கிறது. தேரில், மாடவீதிகள் வழியாக வலம் வரும் சுவாமியை வரவேற்க பக்தர்கள் காத்திருக்கின்றனர். புதன்கிழமை சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.