வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி
வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் படுமோசமாக உள்ளதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்து அமைந்துள்ளது வல்லக்கோட்டை ஊராட்சி. இங்கு, பிரசித்தி பெற்ற வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், அருண கிரிநாதர் திருப்புகழ் பாடிய சிறப்பும் உள்ளது. தற்போது இந்த கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் வந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, குளக்கரை தெரு, சிவன்கோவில் தெரு, கோவில் எதிரே உள்ள சாலை ஆகிய நான்கு சாலைகளும் பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை நீர், மேற்கண்ட சாலை பள்ளங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால், பக்தர்கள் அதில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் மொய்ப்பதால், அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவிலுக்கு செல்லும் இந்த சாலைகளும் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில் நிர்வாகத்தினருக்கும், ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் இடையேயான மோதல் காரணமாக, பல ஆண்டுகளாக, இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமவாசி ஒருவர், வல்லக்கோட்டை.