தரிசனத்துக்காக சேலம் வந்த ஷீரடி சாய்பாபா பாதுகை
சேலம்: ஷீரடி சாய்பாபா பயன்படுத்திய பாதுகை, பக்தர்களின் தரிசனத்துக்காக, சேலம் கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா சமாதியில், அவர் பயன்படுத்திய பொருட்கள், பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பாதுகை, ஷீரடியில் உள்ளது. அதை, பக்தர்கள் தரிசனத்துக்காக, சேலத்தைச் சேர்ந்த ஷீரடி சாய் நண்பர்கள், நான்காம் ஆண்டாக, நேற்று, சேலம் கொண்டுவந்தனர். சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாதுகை வைக்கப்பட்டது. இதையொட்டி, அதிகாலை முதல், பாபாவுக்கு சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணம் நடந்தது. 100 கிலோ எடையில் அன்னம் தயாரித்து, லிங்கம் வடிவமைத்து, பூஜை நடந்தது. தொடர்ந்து, பரத நாட்டியம், வீணை, இசை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள், பாபா பாதுகை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 10:00 மணி வரை தரிசனம் நடந்தது.