காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3043 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா, நேற்று (ஜுன். 12ல்) கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, முக்கிய விழாவான தேர் திருவிழா, நேற்று (ஜுன். 12ல்) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக, அதிகாலை, 4:10 மணிக்கு, வரதராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடிக்க, தேர் காந்தி சாலை, காமராஜர் சாலை, நான்கு ராஜவீதிகள் சுற்றி, மதியம் நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.