கல்யாண வெங்கடேச பெருமாள் தேரில் பவனி
நாராயணவனம் : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உபகோவிலான, கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நகரி அடுத்த, நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ளது, பத்மாவதி உடனுறை கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில். பத்மாவதி தாயாரை, பெருமாள் திருக்கல்யாணம் செய்த தலம் என்ற சிறப்பு வாய்ந்தது இந்த தலம். கோவிலில், சுவாமியின் திருக்கல்யாண மேடை மற்றும் கல்யாண விருந்திற்கு மாவு அரைத்த இயந்திர கல், இன்றும், பக்தர்களின் தரிசனத்திற்கு காண கிடைப்பது பெரும் பாக்கியம். சிறப்பான இந்த கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை அன்னம், நாகம், கற்பகதரு, சந்திரன் சூரிய பிரபை, சிம்மம் என, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். கருட சேவை, கடந்த சனிக்கிழமை இரவு நடந்தது.
நேற்று, காலை 8:30 மணிக்கு, தேரில் பெருமாள் பவனி புறப்பட்டார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷம் விண்ணை பிளந்தது. தேரோட்டத்தின் போது, கேரள செண்டை மேளம், கரகாட்டம், கோலாட்டம் என, பக்தி குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.மாடவீதியில், பக்தர்களின் தாகம் தணிக்க மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டன. மாலை 4:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது. இன்று காலை, கோவில் புஷ்கரணியில் சக்கரஸ்தானம் நடக்கிறது. இன்றுடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.