கம்பம் கோயிலில் புதிய பட்டத்துக்காளை தேர்வு
கம்பம்: கம்பம் நந்தகோபாலன் கோயிலில் புதிய பட்டத்துக்காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் பசுக்களை தெய்வமாக வணங்கும் ஒக்கலிகர் இன மக்களின் நந்தகோபாலன் கோயில் உள்ளது. இங்கு தெய்வ விக்ரகங்கள் கிடையாது. பட்டத்துக் காளைக்கு தான் பூஜை தினமும் நடைபெறும். நந்தகோபாலன் தம்பிரான் மாட்டு தொழு என இதை அழைக்கின்றனர்.
இக்கோயிலில் 20 ஆண்டாக இருந்த பட்டத்துக்காளை கடந்த 6 தேதி இறந்தது. அதன் தொடர்ச்சியாக 12ம் நாளில் புதிய பட்டத்துக்காளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் வளாகத்தில் நடந்தது. காளைக்கு உரியவர்கள் என்று கருதப்படும் பட்டக்காரர், பூசாரியார், கோடியப்பனார், பெரியதனக்காரர் ஆகிய நால்வர் மற்றும் தாய்மாமன் உன்டேனவரு குலதாயாதிகள் தானவானக்காரர்கள் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.மூங்கில் கட்டிய வளாகத்திற்குள் பட்டத்துக்காளை வம்சத்தை சேர்ந்த 50 பசு மற்றும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்தவளாகத்தின் ஈசானி மூலையில் வைக்கப்பட்டிருந்த பச்சை சோகையுடன் கூடிய கரும்புக் கட்டை 3 வயதுடைய காளைகடித்தது. அந்த காளையே பட்டத்துக் காளையாக தேர்வு செய்யப்பட்டது. ஏராளமானோர் கூடிநின்று ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு வழி வகுத்தனர். தாய்மாமனார் உண்டேனவரு குலத்தவர் கொண்டு வந்தபட்டுத்துண்டு காளைக்கு போர்த்தி அலங்காரம் செய்யப்பட்டது. அக்காளைக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி, அலங்கரிக்கப்பட்டு மக்களின் தரிசனத்திற்காக திடலில் நிறுத்தப்பட்டது. ஏராளமானோர் வழிபட்டனர்.