வேண்டிய வரம் தரும் தாழையடி கருப்பசுவாமி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் கம்பீரத்துடன் நின்று அருள் பாலிக்கும் தாழையடி கருப்பசுவாமியிடம், வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஜம்புலிபுத்துாரில் இருந்து வைகை ஆறு செல்லும் காட்டுப்பாதையில் இரண்டு கி.மீ.,துாரத்தில் உள்ளது தாழையடி கருப்பசுவாமி கோயில். பல ஆண்டுக்கு முன் இங்கு ஓடையில் தாழம்பூக்கள் அதிக அளவில் இருந்துள்ளது. ஓடைக்கரையில் இருந்த கருப்பசுவாமி இப்பகுதி வழிப்போக்கர்களுக்கு உற்ற துணையாக இருந்து அருள்பாலித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தாழை ஓடையில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நீர் வரத்து இருந்துள்ளது. சிலையுடன் இப்பகுதியில் உசில், சாலி மரங்கள் அதிகம் வளர்ந்து வனப்பகுதியாக இருந்தது. காலப்போக்கில் மரங்கள் பலவும் அழிந்து தற்போது கோயில் வளாகத்தில் பழமையான சில உசில் மரங்கள் மட்டுமே உள்ளது.
கோயிலை பராமரிப்பு செய்து வரும் ஜம்புலிபுத்துாரைச்சேர்ந்த பூசாரி கருப்பசாமி கூறியதாவது: எனது பாட்டன், தந்தைக்குப்பின் மூன்றாம் தலைமுறையாக கோயிலை பராமரித்து வருகிறேன். குழந்தை பேறு, திருமண தடை நீக்கம், செல்வ வளம் வேண்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டி செல்கின்றனர். நினைத்த காரியம் கை கூடிய நிலையில் பலரும் நேர்த்திக்கடன் செலுத்தி பொங்கலிடுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக தண்ணீர், தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார். தொடர்புக்கு: 83440 97712.