ஏரி காத்த ராமர் கோவிலில் ஏராளமான குளறுபடிகள்
மதுராந்தகம் : மதுராந்தகம், ஏரி காத்த ராமர் கோவிலில் நிலவும் குளறுபடிகளால், அதன் புகழ் மங்கி, பெயர் கெடும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் குமுறுகின்றனர். மதுராந்தகத்தில் உள்ள, ஏரி காத்த கோதண்டராமர் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், இது இயங்கி வருகிறது.
மோசமான செயல்: இங்கு, சமீபகாலமாக நிலவி வரும் சில சர்ச்சைகளால், கோவிலின் புனிதம் கெட்டு, அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்களும், பக்கதர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். உதாரணமாக, கடவுளுக்கு பக்தர்களால் போர்த்தப்படும் வஸ்திரங்கள், முறையான கணக்கிற்கு கொண்டு வரப்படுவதில்லை என்கின்றனர்.சாதாரண நுால் வஸ்திரங்கள் முதல், விலையுயர்ந்த பட்டுத் துணிகள் வரை, காணிக்கையாக அளிக்கப்படுகின்றன. அவற்றை கோவிலின் குறிப்பிட்ட அர்ச்சகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தன்னிச்சையாக செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள இந்த வஸ்திரங்களை, முறைகேடாக சிலர் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அனைத்தையும் விட, மிக மோசமான செயல், சில நாட்களுக்கு முன், கோவிலில் அரங்கேறி இருக்கிறது. கோவிலின் அர்ச்சகர் ஒருவர் செய்ததாகக் கூறப்படும் சம்பவம், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. பட்டப்பகலில், தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த இளம்பெண் ஒருவரிடம், கோவிலிலேயே, அந்த வயதான அர்ச்சகர் அத்துமீற முயன்றுள்ளார். பதறியடித்து வெளியேறிய அந்த பெண், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ காவல் நிலையத்தில் சென்று கதறினார்.
நடவடிக்கை தேவை: கடுப்பான போலீசார், அந்த அர்ச்சகரை வரவழைத்து நன்கு, கவனித்து அனுப்பினர். பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வழக்கு பதியாமல் அர்ச்சகருக்கு, பூஜை மட்டும் செய்து, எச்சரித்து அனுப்பினர். ஜூலை, 2ல், கோவிலில், பிரம்மோற்சவத்திற்காக கொடி ஏற்றப்பட விருக்கும் நிலையில், இது போன்ற சர்ச்சைகள் எழாமல், அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
வசூல் செய்யும் அர்ச்சகர்கள்: கோவிலுக்கு சொந்தமான பழைய நகைகளை காட்டி, அதை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி, கோவிலுக்கு வரும் வசதியான பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரிகளை கொண்டு, இக்கோவிலின் நகை, பணம் உள்ளிட்ட விஷயங்களில், உடனடி ஆய்வு செய்தால், பல தில்லாலங்கடி லீலைகள் வெளிப்படும் என்பதே, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.