64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் பெங்களூரு பயணம்
வந்தவாசி: வந்தவாசி அருகே, ஒரே கல்லில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும் ஆதிசேஷன் சிலைகள் செய்ய, கல் வெட்டும் பணி முடிந்துள்ளது. இந்த கற்கள், நாளை, பெங்களூரு செல்கின்றன. கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம சுவாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
துவக்கம் : இங்கு, ஒரே கல்லில், 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும், ஏழு தலை பாம்புகளுடன் ஆதிசேஷன் சிலை அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது. இதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றில் இருப்பது தெரியவந்தது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன், 2014ல், கல் வெட்டும் பணி துவங்கியது. தற்போது, கோதண்டராம சுவாமி சிலை செய்ய, 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசேஷன் சிலை செய்ய, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுஉள்ளது.வெட்டி எடுக்கப்பட்ட கல்லில், பெருமாளின் முகம், சங்கு சக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள், பெங்களூரில் செதுக்கப்படும்.
380 டன் : சுவாமி சிலை செய்ய உள்ள, 380 டன் கல்லை எடுத்துச் செல்ல, 160 டயர்கள் கொண்ட ஒரு கார்கோ லாரியும், ஆதிசேஷன் சிலை செய்ய உள்ள, 230 டன் கல்லை கொண்டு செல்ல, 96 டயர்கள் கொண்ட ஒரு கார்கோ லாரியும் வந்துள்ளன. இவை, நாளை பெங்களூரு செல்கின்றன.கோவில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், நியமிக்கப்பட்டுள்ள லட்சுமணன் என்பவர் தலைமையில், இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.