திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த, பெரியசெட்டிப்பள்ளி திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பெரியசெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு மகாபாரத விழா, கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, செட்டிப்பள்ளி கோவிந்தராஜ் பாகவதர் மற்றும் கனகமணி ஆகியோரின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. பின், 19 நாட்களும், இரவு முழுவதும் கோவில் வளாகத்தில், மகாபாரத நாடகம் நடந்தது. இறுதி நிகழ்ச்சியாக, நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவை காண, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து, தினமும் நாடகத்தை கண்டு களித்தனர்.