அலகுமலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
பொங்கலூர் : கிருத்திகை வழிபாடு துவங்கிய, 50ம் ஆண்டு விழாவையொட்டி, அலகுமலை முருகன் கோவிலில், தேரோட்டம் நடந்தது. பொங்கலூர் அலகுமலையில், முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு, 1968ல், கிருத்திகை வழிபாடு துவங்கியது. இதன், 50வது ஆண்டு துவக்க விழா, நேற்று முன்தினம் நடந்தது. கிருத்திகை வழிபாட்டு குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார். கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பக்தி பாடல்கள் பாடப்பட்டன. மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மலை மீதுள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷங்களுடன், தேரை இழுத்தனர். தேரில் எழுந்தருளிய உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கிருத்திகை வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.