ஆஞ்சநேயர் கோவில் சாலையில் வாகனம்: ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத போலீசார்
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில், கார், வேன் போன்ற வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால், பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, விசேஷ நாட்களில், தமிழகம் மட்டும் இன்றி, வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவில் பகுதியில், வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக, நாமக்கல் நகராட்சி சார்பில், உழவர் சந்தை அருகில், கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக, கோவில் இருபுறமும் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல், கோட்டை சாலையில், வெளிமாநில கார்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் பயணிகள் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கார், வேன் போன்ற வாகனங்களை, கார் பார்க்கிங்கில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.