தெப்பக்குளம் சீரமைப்பு பணியில் மெத்தனம்!
தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், ஆக்கிரமிப்புகளால் தெப்பக்குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டது. சில மாதங்களுக்கு முன்பு புதிய தேரின் தேரோட்டம் நடந்த போதே தெப்பக்குளம் சீரமைக்க போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் செயற்கை தெப்பம் உருவாக்கப்பட்டு, தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது. திருவிழா முடிந்து பல மாதமாகியும் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி துவங்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தெப்பக்குளத்தில் தேங்கி அப்பகுதியில் சுகாதார கேட்டை ஏற்படுத்திவருகிறது. தெப்பக்குளம் சீரமைப்பதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காவது, தெப்பம் சீரமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.