உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களைகட்டுகிறது கன்னியாகுமரி குவிந்தனர் பக்தர்கள்!

களைகட்டுகிறது கன்னியாகுமரி குவிந்தனர் பக்தர்கள்!

கன்னியாகுமரி : சபரிமலை சீசன் துவங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிய துவங்கியுள்ளனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் துவங்கியதையடுத்து சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். நேற்று காலை முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு மாலை அணிந்து விரதம் துவங்கினர். சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்ல தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கும் வந்து செல்வது வழக்கம். ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர் என்று புனித தலங்களை தரிக்கும் பக்தர்கள் சர்வதேச சுற்றுலாதலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கும் வந்து செல்வது வழக்கம்.

பஸ், கார், வேன் மூலம் வரும் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம், காமராஜர் மண்டபம், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை தரிசித்து செல்வார்கள். இப்படி குமரிக்கு வரும் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து வீட்டிற்கு தேவையான துணிகள், எலெக்ட்ராணிக் பொருட்கள், கடல் சிப்பிகள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்கி செல்வதால் வியாபாரமும் களைகட்டும். ஆண்டுதோறும் நவம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி மாதம் 20ம் தேதிவரை கன்னியாகுமரியில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் சீசனாகும். இந்த சீசனில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை, அரையாண்டு விடுமுறை என்று விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆண்டுதோறும் இந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வதாக சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி பஞ்., நிர்வாகம் சார்பில் 60 நாட்களுக்கு தற்காலிக சீசன் கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 250 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் வியாபாரிகள் குமரியில் குவிந்துள்ளனர். மேலும் கடற்கரை சாலை, சன்னிதி தெரு, காமராஜர் மண்டப சாலை உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: நாங்கள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வியாபாரம் செய்ய கன்னியாகுமரி வருவோம். கடந்த ஆண்டு சீசன் வியாபாரம் நன்கு நடந்தது. இந்த ஆண்டும் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சபரிமலையில் இந்த ஆண்டு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் கன்னியாகுமரியில் பொருட்களை வாங்குவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !