சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் முன் கடல் நீர் ஏற்றம்
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரையில் மகாளய, தை, ஆடி ஆமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றி விட்டு கடற்கரை முன்புறம் அமைந்துள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்வார்கள். கடலில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த படித்துறையின் படிக்கட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, கட்டட கழிவுகளை அப்படியே பக்தர்கள் புனித நீராடும் கடற்கரையோரப்பகுதியில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் கடலில் கோயிலுக்கு எதிரில் இடத்தில் நீராட முடியாமல் வருகின்றனர்.
திருப்புல்லாணி யூனியன் மூலமாக ரூ. 9 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிகளுக்காக ஜல்லிகள், மணல் குவிக்கப்பட்டு மூன்றாண்டுகளாகிறது. பணிகள் நடைபெறாமல் இழுத்தடிப்பு நிலையில் உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டும் பணிகள் முடிக்கப்படாததால், அத்தொகை மீண்டும் அரசுக்கே சென்று விட்டது. படித்துறை இல்லாததால் கடல் அரிப்பு ஏற்பட்டு கோயிலுக்கு அருகாமையில் கடல் நீர் வந்து விட்டது. திருப்புல்லாணியை சேர்ந்த என்.சேதுபாண்டியன் கூறுகையில், ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிர்புறம் உள்ள கடலில், நீராட செல்ல முடியவில்லை. படித்துறை எழுப்பவதற்குரிய மணல், செங்கல், ஜல்லிக்கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பணி நடக்கவில்லை. கட்டக்கழிவு கூர்மையாக உள்ளதால், அவற்றை கடந்து செல்லும் போது காலில் காயத்தை உண்டாக்குகிறது. தீர்த்தமாட வரும் பக்தர்கள் மட்டுமின்றி, முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடத்தை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இன்னும் சில வருடத்தில் கோயிலின் அருகில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சேதுக்கரை ஊராட்சியை புறக்கணிக்காமல் மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதியில் இருந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , என்றார்.