கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித்தேரோட்ட கொடியேற்றம்
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கம்பம் நகரில் அமைந்துள்ள கம்பராயப் பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில். ஒரே வளாகத்தில் சிவனும் பெருமாளும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயில் ஆனித் தேரோட்டம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் ரத உற்சவ கமிட்டியால் நடத்த முடிவு செய்யப்பட்டது. 14 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் இத்தேரோட்டத்திற்கான துவக்க நிகழ்ச்சிகள் நேற்று காலை கோயில் வளாகத்தில் நடந்தது.
கொடியேற்றம்: பெருமாள் கோயில் முன்பாக அமைந்துள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி தர்ப்பை புல் கட்டி, சாமாண்டியம்மன் வழங்கிய சேலை கட்டப்பட்டது. காலை 9:00 மணி முதல் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் 9:50 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் ஏாளமானோர் தரிசனம் செய்தனர்.
* ரத உற்சவ கமிட்டி தலைவர் எஸ்.டி.டி. இளங்கோவன் கூறுகையில், “இன்று முதல் மண்டகப்படி நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து 8 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் ஜூலை 8 ல் தேதி திருக்கல்யாணமும், 11 ம் தேதி தேரோட்டமும் துவங்கும். முதல் நாள் தேர் நிலையில் இருந்து கிளம்பி வ.உ.சி., திடலில் நிறுத்தப்படும். மறுநாள் வ.உ.சி., திடலில் புறப்பட்டு பார்க் ரோடு சந்திப்பில் நிறுத்தப்படும். 13 ம் தேதி மாலை அங்கிருந்து காந்திஜிவீதி, வேலப்பர் கோயில் வீதிகள் வழியாக நிலைக்கு வந்து சேரும்” என்றார். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், தக்கார் பாலகிருஷ்ணன், ரத உற்சவ கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.