புதுக்கோட்டைகோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களில் மாலை அணிந்து விரதம் துவக்குவதற்காக நேற்று அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குவது வழக்கம். இங்கு தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சகணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை தரிசித்து வருகின்றனர். இவ்வாறு சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் கார்த்திகை மாத முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் துவக்குவது வழக்கம். நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் அனைவரும் நேற்று அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். புதுக்கோட்டை டவுன் சின்னப்பா நகர் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் பாத சுவடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட துளசிமணி மாலைகளை "சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் உச்சரித்தவாறு ஐயப்ப பக்தர்கள் அணிந்து கொண்டனர். இதுபோன்று தண்டாயுதபாணி திருக்கோவில், சாந்தநாத சுவாமி திருக்கோவில், குமரமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் மாலை அணிவதற்காக நேற்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் ஐயப்ப சுவாமி குறித்த சரணகோஷம், பக்தி பாடல்கள் ஒலித்தது. ஐயப்ப பக்தர்களை ஈர்க்கும் விதமாக தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் ஐயப்ப சுவாமியின் படம் பூஜிக்கப்பட்டு வருகிறது.