திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி: நெல்லையில் நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோயிலின் 514வது ஆனித்தேரோட்ட பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் நடக்கும் ஆனித்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவில் சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதையொட்டி நேற்று பகலில் சுவாமி நடராசப்பெருமான் பச்சை சாத்தி எழுந்தருளல் மற்றும் திருவீதி உலா நடந்தது. முன்னதாக கோயில் யானை காந்திமதிக்கு கால்களில் வெள்ளிக்கொலுசு அணிவிக்கப்பட்டிருந்தது. இன்று( 7ம் தேதி) காலை 8.45 மணி முதல் 9.15 மணிக்கு சுவாமி தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். காந்திமதியம்மன் தேர், சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியனவும் ரதவீதிகளில் வலம் வந்தது. தேரோட்டத்திற்காக நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.