உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஆராட்டு விழா நிறைவு: ஆடி மாத பூஜைக்காக 16ம் தேதி திறப்பு

சபரிமலையில் ஆராட்டு விழா நிறைவு: ஆடி மாத பூஜைக்காக 16ம் தேதி திறப்பு

சபரிமலை: சபரிமலையில் நடந்து வந்த 10 நாள் ஆராட்டு திருவிழா, நேற்று மதியம் பம்பையில் ஆராட்டு மற்றும் இரவு சன்னிதானத்தில் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

சபரிமலையில் புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம், கடந்த மாதம் 25-ம் தேதி நடந்தது. அதன் பின் ஆராட்டு திருவிழா 28-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலியும், ஐந்தாம் திருவிழா முதல் யானை மீது சுவாமி
எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாள் விழா முதல் தினமும் மதியம் 12 மணிக்கு உற்சவபலி நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின், சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். பள்ளி வேட்டைக்கு பின் நள்ளிரவில் சன்னிதானம் திரும்பிய சுவாமி, கோயில் முன் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமி கோயிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பூஜைகளும் நெய்யபிஷேகமும் நடந்தது. காலை 7:00 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் யானை மீது சுவாமி சிலை ஏற்றப்பட்டு, ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடந்தது. ஆராட்டு குளப்படியில் ஐயப்பனின் சிலைக்கு பலவகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தந்திரியும், மேல்சாந்தியும் ஐயப்பன் சிலையுடன் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர். மதியம் 3:00 மணிக்கு சன்னிதானத்துக்கு புறப்பட்ட ஆராட்டு பவனி, இரவு 9:00 மணிக்கு சன்னிதானம் வந்தது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. 10:00 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இனி ஆடி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். 17-ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !