உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: ரங்கநாதருக்கு, தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாள கிராம மேனி கொண்ட (சுதை சிலை) பெருமாள் சிலைகளுக்கு, அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை, ஆனி கேட்டை நட்சத்திர நாளில், தைலக்காப்பு சாற்றப்படுகிறது. இதன்படி தமிழகத்தில், சுதை சிலை உள்ள, அனைத்து பெருமாள் கோவில்களிலும், தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன்படி ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர், கொடுமுடி வீரநாராயண பெருமாள் கோவில்களில் தைலக்காப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், இதற்கென கடந்த பத்து நாட்களாக, தைலம் காய்ச்சப்பட்டது. சந்தனம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட, எட்டு வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு, தைலம் காய்ச்சும் பணி நடந்தது. தைலப்பானையுடன் கோவிலை சுற்றி வந்து, மூலவருக்கு நேற்று தைலக்காப்பு சாற்றப்பட்டது. தைல காப்பால் அடுத்த, 48 நாட்களுக்கு பெருமாளை முழுமையாக தரிசிக்க முடியாது. முகம், பாதங்களை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். தைலக்காப்பில் உள்ள, பெருமாளின் உஷ்ணத்தை குறைத்து, அவரை குளிர்ச்சிப்படுத்தும் விதமாக, தினமும் தயிர் சாதம் மட்டுமே, நைவேத்தியம் செய்யப்படும், என பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர். பெருமாளுக்கு தைலம் சாற்றப்பட்ட பின் கோவில் வளாகம், நறுமணத்தில் மூழ்கியது. ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !