உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் திருவிழாக்களில் குறையும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் திருவிழாக்களில் குறையும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் கோவில் திருவிழாவை தவிர, மற்ற கோவில்களின் விழாக்கள் மற்றும் உற்சவங்களில், பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. எனினும், காலம் காலமாக இடை விடாமல் நடைபெறும் விழாக்களில், இந்து மத பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோவில் ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

பல்லவர்கள்: காஞ்சிபுரத்தில், சைவம், வைணவம், பவுத்தம், சமணம் என, பல மதங்களை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அதனால் பாரம்பரிய நகரமாக பெயர் ஏற்பட்டது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் இன்னும் சிறப்பு பெற்று விளங்கி வருகின்றன. கோவில்களை நிர்மாணித்தவர்கள், கோவில்களின் செலவு மற்றும் விழாக்களுக்கான வருமானத்திற்கு, ஏராளமான நிலங்களை ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தினர். பக்தர்களும், தங்கள் அன்றாட கடமை போல, கோவில் விழாக்களில் ஆர்வமாக பங்கேற்றனர். இந்த நடைமுறை, மன்னர்கள் காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து நடந்தது. சமீப காலமாக, கோவில் நிலங்களை குத்தகையாக பெற்றவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள், கோவில் நிர்வாகத்திடம் பணம் கொடுப்பதில்லை. இதனால், கோவில்களில் வருமானம் குறைந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், கோவில் விழாக்களை காணவும், அதில் பங்கேற்கவும், பக்தர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. தேரோட்டம், பல்லக்கு ஊர்வலம், தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகளில் கூட, பக்தர்கள் பங்கேற்காமல், கோவில் நிர்வாகத்தினரும், அர்ச்சகர்களும் மட்டுமே பங்கேற்கும் நிலை காணப்படுகிறது. தனித்தனி சமுதாயத்தினர் சார்பில் நடத்தப்படும் கோவில் விழாக்களில், சிறிதளவு கூட்டம் இருக்கிறது. ஆனால், பொதுவான விழாக்களில், அநேகமாக, பக்தர்கள் கூட்டம் இருப்பதில்லை. கோவில் வழிபாடு, இறை நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கை குறைந்து வருவது, கோவிலை நிர்வகிப்போருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை பொறுத்த மட்டில், ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கும், வரதராஜப்பெருமாள் கோவில் தேர் திருவிழாவிற்கும் மக்கள் கூட்டம் இருப்பது போல, மற்ற கோவில்களில் கூட்டத்தை காண முடிவதில்லை.

பெரிய அளவில்:  இன்னும் சொல்லப்போனால், பிரசித்தி பெற்று விளங்கும் பழமையான கோவில் தேர் திருவிழாவிற்கு, பெரிய அளவில் தேர் இல்லை என்பதால், வண்டியில் தேர் போல் அலங்கரித்து இழுத்து செல்கின்றனர்; அதில் கூட மக்கள் செல்வதில்லை. எதிர்காலத்தில் இவ்வாறு திருவிழாக்களில் மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போனால் அந்த கோவில்களில் விழா நடத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போகும் நிலை உருவாகும். இதை தவிர்க்கும் வகையில், அறநிலையத்துறை மற்றும் வழக்கமாக திருவிழா நடத்தும் சமூக அமைப்புகளை அழைத்து பேசி, மக்கள் கூட்டத்தை அதிகரிக்க அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

கோவில் திருவிழா நடக்கும் மாதங்கள்:  காஞ்சிபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் கொடியேற்றப்பட்டு, திருவிழாக்கள் நடக்கின்றன. தை மாதம், உலகளந்த பெருமாள் கோவில், மாசி மாதம், காமாட்சி அம்மன் கோவில், யதோக்தகாரி கோவில், அஷ்டபுஜப்பெருமாள், சித்திரை கச்சபேஸ்வரர்,வைகாசி குமரகோட்டம் முருகன் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், வரதராஜப்பெருமாள் ஆகிய கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விசேஷம் இருக்கும். அதற்கான கூட்டமும் அந்த விழாவில் காண முடியும். எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் உண்டியல் வருமானம் அதிகம் இருக்கும். பிரமாண்டமாக கோவில்கள் இருக்கும் அளவிற்கு, பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. கோவில் விழாக்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கே. ஜெகதீசன், காஞ்சிபுரம்

கோவில் விழாக்களில் பக்தர்கள் அதிகளவு பங்கேற்க தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விளம்பரப்படுத்த வேண்டும்.
பி.நந்தகுமார் காஞ்சிபுரம்

தேர் திருவிழா போன்ற விழாக்களில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். உறவினர்களையும் அழைத்து வருகின்றனர். எனினும், அவர்களால் தேரை இழுத்து, நிலையம் கொண்டு செல்ல முடியாது என்பதால் தான், வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆர்.அலமேலு, காஞ்சிபுரம்

முக்கிய விழாக்களில் பக்தர்கள் கூட்டம்: பிரம்மோற்சவ காலத்தில் குமரகோட்டம் முருகன் கோவிலில் இல்லாத கூட்டம் சஷ்டிக்கு இருக்கிறது. அதே போல, கச்சபேஸ்வரவர் கோவிலில், கடைசி ஞாயிறு விழாவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். சித்திர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான கூட்டத்தை காண முடியும். வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி அன்று கூட்டம் இருக்கும். மகா சிவராத்திரி அன்று கைலாசநாதர் கோவிலில், விடிய விடிய பக்தர்கள் கூட்டத்தை காண முடியும். விநாயகர் கோவிலில் வழக்கத்தை விட விநாயகர் சதுர்த்தி ஆடி மாதங்களில் காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளாமான பக்தர்கள் வருவர். பிரம்மோற்சவம் துவங்கும் முன் உபயதாரர்களுக்கு பத்திரிகை கொடுப்போம். அதற்கு முன் திருவிழா குறித்து ஒரு கூட்டம் நடத்துவோம். அதில் வழக்கமாக உபயதாரர்கள் கருத்தும் தெரிவிப்பர். கோவில் திருவிழா குறித்து விளம்பரம் சிலர் செய்வர். தற்போது இது தான் நடைமுறையில் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் கூட்டத்தை வரவழைக்க வேண்டுமானால் இன்னும் விளம்பரப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும். மக்கள் விரும்பும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். அவ்வாறு ஏற்பாடு செய்தால் இன்னும் கூட்டத்தை அதிகப்படுத்தலாம்.
கோவில் செயல் அலுவலர், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !