உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரு மன்னர்களால் உருவான வீரசோழீஸ்வரர் கோவில்

இரு மன்னர்களால் உருவான வீரசோழீஸ்வரர் கோவில்

சோழர்கள் என்றாலே தஞ்சாவூரும், ஒற்றர்களும்; பரபரப்பான அரசியல் களமும், பொன்னி நதியும் தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களின் எல்லை நமது கொங்கு நாடு வரை பரந்து விரிந்திருந்தது. ஒன்பதாம் நுாற்றாண்டு தொடங்கி சோழர்களின் வளர்ச்சியும், செல்வாக்கும், நாளுக்குநாள் அதிகரித்தது. பதினோறாம் நுாற்றாண்டில் புலிக்கொடியின் ஆதிக்கம் உச்சம் அடைந்தது. தற்போதைய திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் அப்போது கொங்குநாடு என அழைக்கப்பட்டது.

சேரநாட்டின் (கேரளா) கிழக்கு எல்லையில் அமைந்துள்ள, கொங்கு நாடு சோழர்களின் எல்லைக்குட்பட்டிருந்தபோது, தங்கள் எல்லையை வரையறை செய்யவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையிலுள்ள கொழுமத்தை தங்களின் கொங்கு தலைநகராக்கி ஆட்சி செய்தனர். அப்போது கட்டப்பட்ட ’வீரசோழீஸ்வரர் கோவில்’ இன்றும் கம்பீரமாகவும் வரலாற்று சிறப்புகளில் ஒன்றாகவும் உள்ளது.

மூன்றாம் வீரசோழன்: சோழ நாட்டை 1,168 முதல் 1,196ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் வீரசோழன், சைவ சமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டதால் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை கட்டினார். முழுக்க, முழுக்க கருங்கற்களால் இந்த கோவில் உருவானது. கருவறை, இரக்கட்டு மண்டபம், அர்த்தமண்டபத்துடன் அமைந்து, ’வீரசோழீஸ்வரர் ஆலயம்’ என அழைக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கம்பீரமாக உள்ளது. சிவபெருமான் நடராஜராகி நடனம் ஆடும் ஸ்தலமாக உள்ளதால் தாண்டேசுவரர்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவகாமி அம்மனுடன் தாண்டேசுவரர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கோவிலின் சிறப்பு:  இருபதுக்கும் மேற்பட்ட துாண்களால் உருவாக்கப்பட்ட முன்மண்டபம் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இதிலுள்ள ஒவ்வொரு துாணும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. வளாகத்திலுள்ள இதர கோவில்களும் சிறந்த கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளன. துாண்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வை கூறும் பலவகை சிற்பங்களும், சுவர்களில் வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றை சிறப்பாக செதுக்கி, வடிவமைத்ததற்காக வீரசோழ சிற்பாச்சாரியாருக்கும் (கல்தச்சர்), தலைமுறையினருக்கும் சோழ மன்னரால் பல உரிமைகள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வருவாய் கிடைக்க பலஊர்கள் தானமாக கொடுக்கப்பட்டது.

வீரராஜேந்திரசோழர்:  மூன்றாம் வீரசோழரின் ஆட்சிக்கு பின், சில ஆண்டுகள் கழித்து பட்டத்துக்கு வந்த வீரராஜேந்திரசோழர், 1,207 ஆண்டு முதல் 1,256ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சிகாலத்தில், வீரசோழீஸ்வரர் ஆலயத்தில் விஸ்தரிப்புபணி தொடங்கியது. பலஆண்டுகள் கட்டுமான பணிக்கு பின் கோவிலின் முன்பகுதியில் மகாமண்டபமும, நித்தம் நின்றாடுவார் கோவிலும் அமைக்கப்பட்டு, கோவில் புதியதோற்றம் பெற்றது. இதோடு கோவிலை சுற்றி ஆற்றங்கரை ஓரங்களில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு, விவசாய நிலங்கள் அதிகரிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், கொங்கு எல்லையின் பாதுகாப்புக்காக சோழர் துணைபடைபிரிவுகள், கோவில் அருகில் மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கி பணியில் ஈடுபட்டன.

திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது: இந்த கோவிலில் தற்போது தினசரி பூஜைகள் நடக்கின்றன, ஆண்டு தோறும் ’சிவகாமி அம்மன் உடனமர் தாண்டேசுவரருக்கு’ நடக்கும் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. கொழுமம் பஸ் ஸ்டாப்பிலிருந்து அக்ரஹாரத்தை கடந்து சென்றால் சிலநுாறு மீட்டர் தொலைவில், இயற்கைஎழில் கொஞ்சும் விதமாக கோவில் அமைந்துள்ளது. மடத்துக்குளம், உடுமலையிலிருந்து பஸ்வசதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !