மூன்று மாதங்களில் பொலிவு பெறும் மீனாட்சி கோவில் பொற்றாமரை குளம்!
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி, 25 லட்ச ரூபாய் செலவில் நேற்று துவங்கியது. மூன்று மாதங்களில் இப்பணி முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோவிலைச் சுற்றி பல நூறு அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோவில் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது அவை சரிசெய்யப்பட்டன. தண்ணீர் தேங்கியிருந்ததால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுக்கிறது. இதைத் தவிர்க்க, சிமென்ட் தளத்தை அகற்றி, நிரந்தரமாக தண்ணீர் தேக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில், இதை ஒரு வாக்குறுதியாக பிரசாரம் செய்ய கட்சிகள் தவறவில்லை. நேற்று, 25 லட்ச ரூபாய் செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பூஜையில், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மேயர் ராஜன்செல்லப்பா, சுந்தரராஜன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் நடராஜன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் பங்கேற்றனர்.
கருமுத்து கண்ணன் கூறியதாவது: சென்னை ஐ.டி.டி., பேராசிரியர் ரவீந்திரகெட்ஜு ஆலோசனையின்படி, கற்கள் அகற்றப்பட்டு, "ஜியோ மெம்பரிங் தொழில்நுட்பத்தில், அதாவது குளம் முழுவதும் உலோக விரிப்பை விரித்து, அதன் மேல் 2 அடிக்கு களிமண் நிரப்பி, நிரந்தர தண்ணீர் தேக்கப்படும். தாமரைகளும் வளர்க்கப்படும். ஸ்பான்சர் மூலம் மேற்கொள்ளும் இப்பணி, மூன்று மாதங்களில் முடியும். பொற்றாமரைக்குளத்தின் தெற்கு பகுதியில், விரிசல் அடைந்த கல்தூண்கள், சுற்றுலா நிதி 50 லட்ச ரூபாய் செலவில் புதிதாக மாற்றப்படும். மாரியம்மன் தெப்பக்குளத்திலும் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படுகிறது. அய்யப்ப பக்தர்களின் கூட்டத்திற்கேற்ப, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற கோவில்களைவிட, மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசன கட்டணம் குறைவு. சித்திரைத் திருவிழாவிற்குள் புதிய கொடி மரம் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு கண்ணன் கூறினார். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை உற்சவங்களுக்கு தங்கம், நவரத்ன கற்கள் பதித்த, 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 1.75 கிலோ எடையுள்ள கிரீடங்களை காணிக்கையாக, உபயதாரர்கள் வழங்கினர். திருக்கல்யாணத்தன்று, இக்கிரீடங்கள் உற்சவர்களுக்கு சாத்தப்படும்.