800 ஆண்டு பழமையான கோவிலுக்கு பூட்டு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்
பெருந்துறை: அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால், 800 ஆண்டுகள் பழமையான கோவில், பூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெருந்துறை தாலுகா, தென்முகம் வெள்ளோடு கிராமம், பூந்துறை சாலையில் ராசாசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், 800 ஆண்டுகள் பழமையானதாகும். தேவனம்பாளையம், உலகபுரம், கனகபுரம் கரையைச் சேர்ந்த, ஒரு தரப்பு மக்களால் நிர்வகிக்கப்பட்டது. உண்டியல் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரால், 1993ல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குப் போனது. இந்நிலையில் ராசாசுவாமி கோவிலில், வழிபாடு செய்வதற்கு போதிய இடவசதி இல்லை. எனவே, இடித்துவிட்டு, அருகில் உள்ள இடத்தில் புதிய கோவில் கட்ட, 2009ல், தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம் ராசாசுவாமி நற்பணி மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் அருகில், ஒரு ஏக்கர் நிலத்தை, 2010ல் இந்து சமய அறநிலையத்துறைக்கு மேற்படி சங்கத்தினர் தானமாக வழங்கினர். கோவிலை இடித்து அகற்ற, துறை ரீதியான அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில், 2015ல், மற்றொரு வழக்கில், புராதான கோவில்களை இடித்துவிட்டு புனரமைப்பு செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ராசாசுவாமி கோவிலை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கோவில் கும்பாபிஷேக விழா, 2016 ஜனவரி மாதம் நடந்தது.
பூட்டப்பட்ட பழைய கோவில்: புதிய கோவில் கும்பாபிஷேக விழா நடந்தபோது, பழைய கோவில் பொங்கல் மண்டபத்தை, மர்ம ஆசாமிகள் இடித்தனர். இதை காரணமாக கூறி, பழைய கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை பூட்டியது. ஒன்றரை ஆண்டாகியும், அதே நிலை தொடர்கிறது. கோவிலை பூட்டியதில், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உள்நோக்கம் உள்ளது. இதனால் பழமையான கோவில், பாழடைந்து வருகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: பாதுகாப்பு கருதியே, பழைய கோவில் பூட்டப்பட்டுள்ளது. புனரமைப்பு செய்த பிறகே வழிபாட்டுக்காக திறக்க முடியும். மேலும், புதிய கோவில் அருகில் இருக்கும்போது, பழைய கோவில் பூட்டப்படுவதில் தவறில்லை. புதிய கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவேதான் பழைய கோவிலில் இருந்த நான்கு சிலைகளை, புதிய கோவிலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வெள்ளோடு, துரைசாமி என்பவர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை, புது கோவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிப்பது வியப்பாக உள்ளது. பழைய கோவிலில் இருந்த நான்கு சிலைகளை, புதிய கோவிலில் நிறுவ யார் அனுமதி வழங்கியது? இதில் நடந்த முறைகேடுகள் குறித்து, அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.