உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகனூரில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தியாகனூரில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

சென்னை: சேலம் மாவட்டம், தியாகனுார் மலை மண்டல பெருமாள் கோவிலில், பழங்கால ஐந்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள், தியாகனுாரில் ஆய்வு செய்தனர். அங்குள்ள, மலை மண்டல பெருமாள் கோவிலில், ஐந்து கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர்.

இது குறித்து, ஆறுகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது: மலை மண்டல பெருமாள் கோவிலில், ஆறு கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு, தமிழக தொல்லியல் துறையால் படி எடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடக்கு சுவரில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வாணகோவரையர் கால கல்வெட்டு உள்ளது. அதில், கோவில் திருப்பணி மற்றும் பூஜைக்காக, தொழுதுாரில், 1,000 குழி நன்செய் நிலம் தானம் கொடுத்த செய்தி உள்ளது.வடக்கு அர்த்த மண்டபம் முதல், அதிட்டானம் வரை, மற்றொரு கல்வெட்டு உள்ளது. ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த அதில், ஏற்கனவே தானமாக வழங்கப்பட்ட ஆத்துார் பழம்பற்றில் இருந்த கல்பூண்டி என்ற ஊரை அளந்து, கோவிலுக்கு மீண்டும் தானம் கொடுத்த செய்தி உள்ளது. மேற்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டில், கோவில் ஊழியர்களுக்கு, பிள்ளை ஏந்தல் என்ற ஊரில், 1,000 குழி நிலம் தானம் கொடுத்த செய்தி உள்ளது. கோவிலின் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டில், 1469ல், கோவிலை புதுப்பித்து, ஏரி வெட்டப்பட்டது மற்றும் நெசவாளர்கள், தேவரடியார்கள் போன்றோர், அவ்வூரில் குடியேறிய தகவல்கள் உள்ளன. கருவறை மேற்கு விருத்த குமுதத்தில், விஜயநகர பேரரசு கால கல்வெட்டு உள்ளது. அதில், கோவிலில் பணிபுரிந்த மூவருக்கு, நாரியப்பனுார் ஏரியின் கீழ் உள்ள, 1,500 குழி நிலம் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !