உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இக்கோயிலில் கடந்த 5 நாட்களாக பிரம்மோற்ஸவ விழா நடந்து வருகிறது. தினமும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஐந்தாம் நாளில் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு அதிகாலையில் யாக பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் வெண்பட்டுடன் நீலநிற அங்கி அணிந்த பெருமாள் கோயில் முன் அமைக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினார். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் மணமேடையில் எழுந்தருளினர். இருவருக்கும் மாங்கல்ய பூஜைகள் நடந்தது. மாலை மாற்றும் வைபவம் முடிந்தபின் பெருமாள் இருவருக்கும் தாலி அணிவித்தார். பெண்கள் பூக்களை துாவி வழிபட்டனர். சென்னை டி.வி.எஸ். லுாகாஸ் அதிபர் சரத்விஜயராகவன், கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன் தலைமையில் பெருமாளுக்கு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு படைத்தனர். பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !