உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டியதை வழங்கும் பெரியகளத்தை ஆதீஸ்வரன் கோவில்

வேண்டியதை வழங்கும் பெரியகளத்தை ஆதீஸ்வரன் கோவில்

பொள்ளாச்சி : கோவில் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம் என, பழங்கால பழமொழி உள்ளது. அதற்கேற்ப, ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள கோவிலுக்கு சிறப்பு உள்ளது. பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவில், 1,200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதற்கு கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அருணகிரிநாதர் சிவபெருமானை போற்றிப்பாடிய திருத்தலங்களில், பெரியகளத்தை ஆதிஸ்வரன் கோவிலும் இடம் பெற்றுள்ளது. கி.பி. 800ம் ஆண்டில், ஆதித்தகரிகாலன் சோழன் ஆட்சிக்காலத்தில் ஆதீஸ்வரன் கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. மொத்தம், இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலில், அமுத மண்டபம், முன்மண்டபம், தியான மண்டபம், வழிபாட்டு மண்டபம், கருவறை என,கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலில், பதஞ்சலி சித்தர் தியானம் செய்ததாகவும், வாலி வழிபட்டதாகவும், தூண் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. கோவிலின் தலவிருட்சமாக சந்தனமரம் உள்ளது. கோவில் வளாகத்தில், இந்திர, பிரம்ம, சூரிய, துர்வாச தீர்த்தக்கிணறுகள் இருந்துள்ளன. தற்போது, பிரம்ம தீர்த்தம் மட்டுமே உள்ளது. அதில், வேண்டுதலுக்காக சில்லறை காசுகளை காணிக்கையாக பக்தர்கள் போட்டுள்ளனர். சுயம்புவாக எழுந்தருளிய ஆதீஸ்வரனுக்கு கோவில் கட்டி கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஆதீஸ்வரனுக்கு, வலது பக்கம் அம்பாள் சன்னதி உள்ளது. கோவிலில் மும்மூர்த்தி விநாயகர், சனி பகவான், குருபகவான், முருகன், நடராஜர் என, தனித்தனி பரிவார தெய்வங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !