பாரியூர் கோவில் தங்கத்தேர் ஓடும் பாதை
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கோவிலில் பக்தர்களின் நன்கொடையால், தங்கத் தேர் ஓடுவதற்கான பாதை அமைக்கப்படுகிறது.தமிழக அளவில் பிரசித்தி பெற்றது கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில். ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழாவில் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவர்.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சென்ற தி.மு.க., ஆட்சியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் தயாரானது. கோவிலை சுற்றிலும் பாராங்கல் அமைக்கப்பட்டுள்ளதால் தேரோட்டம் நடத்த முடியாத நிலை உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அறநிலையத்துறை நிதி வழங்காததால், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவங்கவில்லை. அறநிலையத்துறை சார்பில், ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. ஓராண்டுக்கு மேலாகியும், தேரோட்டம் நடக்காதால், வடிகால் அமைக்கும் பணியுடன், தேரோட்ட பாதை அமைக்க, பக்தர்களிடம் நன்கொடை கோரப்பட்டது. தங்க தேர் எட்டு அடி அகலம் கொண்டது. எனவே, 12 அடி அகலத்துக்கு ஓடுபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளிக்க முன் வந்தனர். கோவில் வளாகம் முழுவதும் சலவை கற்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரூரில் இருந்து மிகப் பிரம்மாண்டமான வெண் சலவை கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.சென்ற ஆட்சியில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மீண்டும் நிதி கிடைக்குமா? என்ற சந்தேகத்தில், பக்தர்களே நன்கொடை மூலம் தங்கத் தேரோட்டப் பாதை அமைப்பதால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் மாதம் இப்பணி நிறைவுறும். ஜனவரியில் தேரோட்டம் நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.