சொர்ண வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம் : பில்லாலி தொட்டியில் சொர்ண வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டி புராணகாலத்தில் தாருகா வனம் என பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கியது. இத்தலம் திரிபுரம் எரித்த போரில் திருமால், சிவபெருமானின் அம்பாக வந்து விழுந்த புண்ணிய பூமியாகும். இங்கு அமைந்த கோவிலை ஜெயகாந்தி பராமரித்து வந்தார். அவருக்கு பிறகு அவரது சீடர் குமார் குருஜி பொறுப்பேற்று புதிய கோவில் கட்டினார். சுகய் பிரம்ம மகரிஷி அருட்பீடம் என அழைக்கப்படும் இத்தலத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சக்தி சரவணபவனார், கடன் தீர்க்கும் சொர்ண வெங்கடேச பெருமாள் கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 18ம் தேதி விநாயகர் வழிபாடு நடந்து யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை சாந்தி ஹோமம், ப்ராயசித்தி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, யாத்ரா தானம் பூஜைகளைத் தொடர்ந்து விநாயகர், முருகன், சொர்ண வெங்கடேச பெருமாள் கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையடுத்து மகா தீபாராதனையும், அன்னதானம் நடந்தது. ரமணி குருஜி, சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் சேர்மன் குமார் குருஜி, செயலர் ரவிசங்கர் மேனேஜர் டிரஸ்டி அமர்நாத், அறங்காவலர்கள் நாராயணன், வாசுதேவன், அருண், முரளி, சீனுவாசன், சுப்ரமணியன், சுந்தரராஜன், சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.