காலபைரவர் அஷ்டமி பூஜை விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவர் அஷ்டமி விழாவை முன்னிட்டு, யாக குண்டத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வரும் அஷ்டமி தினம், காலபைரவருக்கு உகந்தது என்பதால், காலபைரவர் அஷ்டமி விழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நேற்று, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.காலபைரவர் அஷ்டமி தினத்தில் இறைவனை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். நேற்று முன் தினம் காலபைரவர் அஷ்டமி விழாவை முன்னிட்டு, சிவாச்சாரியர்கள் சண்முகம், சுகவனம் தலைமையில், ஹோம குண்டத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீரபாதனை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மக்கள் கூட்டம் அதிகளவு இருந்ததால், தடுப்பு ஏற்படுத்தி, நீண்ட வரிசை ஏற்படுத்தி, கோவிலுக்குள் பக்தர்கள் அனுப்பப்பட்டனர். நேற்று முன் தினம் மாலை முதல்கால பூஜை நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலபைரவர் அஷ்டமி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.காலபைரவர் அஷ்டமி தினத்தில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், எண்ணை விளக்கு, பூசணி விளக்கு, மண்சட்டி விளக்கு, தேங்காய் விளக்கு ஏற்றி, காலபைரவரை வழிபட்டனர்.