மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) (முயற்சி முன்னேற்றம் தான்!)
அன்புக்கு அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு 3-ல் சிம்மத்தில் உள்ள ராகு 2-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். இவரால் குடும்பத்தில் பிரச்னை, தூரதேச பயணம் உண்டாகும். 9-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, 8-ம் இடமான மகரத்திற்கு மாறுவதன் மூலம் உடல் உபாதைகள் வரலாம். முயற்சி இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும்.6ல் உள்ள சனிபகவானால் கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். மேலும் அவரது 10-ம் இடத்துப் பார்வை மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். டிச.18-ல் 7-ம் இடத்திற்கு தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் ஏற்படலாம்.
4-ம் இடத்தில் உள்ள குருபகவானால் மனஉளைச்சல் ஏற்படலாம். உறவினர் வழியில் வீண்விரோதம் வரலாம். ஆக. 31- வரை இந்நிலை தொடரும். அதன் பின் 5-ம் இடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். அவரது 5,7-ம் இடத்துப் பார்வை மூலம் சாதகமான பலன் கிடைக்கும். இனி காலவாரியான பலனைக் காணலாம்.
2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதிஇடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். ஆக.31-க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். பணியாளர்களுக்கு ஆக. 31-க்கு பிறகு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். கலைஞர்கள் நற்புகழ் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும்.அரசியல்வாதிகள் ஆக. 31-வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி சுமாராக இருக்கும். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆக. 31க்கு பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவர். அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். ஆக. 31-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். தடைபட்டு வந்த திருமணம் கைகூட வாய்ப்பு வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
2018 ஜனவரி – 2019 பிப்ரவரி 2018 பிப்.13- வரை குருபகவான் 5-ம் இடத்தில் இருப்பதால் அவரால் நன்மை கிடைக்கும். 2018 ஏப். 9- முதல் செப். 3- வரை குரு வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-, மனைவி இடையே அவ்வப்போது சச்சரவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துப் போவது நல்லது. குருவின் வக்ர காலத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு செல்ல நேரிடலாம். புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். 2018 பிப். 13-க்கு பிறகு வேலையில் நிதானம் தேவை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள கல்வியில் முன்னேறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். 2018 பிப்.13- க்கு பிறகு நட்பு விஷயத்தில் கவனம் தேவை. ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது. விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்கள்குடும்பத்தில் விட்டு கொடுக்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் நவக்கிரக அர்ச்சனை வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம் பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு