எதனால் வெற்றி?
ஆஞ்சநேயரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்த பக்தர் ஒருவன். அவருடன் சொக்கட்டான் விளையாட ஆசைப்பட்டான். எனவே ஆஞ்சநேயரிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்ய, ஆஞ்சநேயருக்கு அதற்கு ஒப்புக்கொண்டு, இந்த விளையாட்டில் நீ தோற்றுவிட்டால் வருத்தப்படாதே! அதே சமயம் நான் விட்டும் கொடுக்கமாட்டேன்! என்று கூறினார். விளையாட்டு ஆரம்பமானது பக்தரும் ஆஞ்சநேயரும் மாறிமாறி விளையாடினார்கள். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும், ஜெய் ராம் என்று கூறியபடி காய்களை உருட்டினார். அதேசமயம் அந்த பக்தர், ஜெய் அனுமான் என்று கூறிக்கொண்டே காய்களை உருட்டினான். முதல் ஆட்டத்தில் பக்தன் வெற்றி பெற்றான். ஆஞ்சநேயர் அடுத்த தடவையாவது வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன், ஜெய் ராம் என்று கூறியபடியே மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் இறுதி வரை பக்தனே வெற்றி பெற்றான். ஆஞ்சநேயர் மிகுந்த மன வருத்தத்துடன் ராமபிரானிடம், தங்கள் திருநாமத்தை உச்சரித்த எனக்கு ஏன் தோல்வியை தந்தீர்கள்? என்று மனம் உருகி கேட்டார். இதற்கு ராமர், ஆஞ்சநேயனிடம், உன்னோடு என் அருளும் இருக்கிறது. நீ என்னுடைய பக்தன் என்பதனால் ஆனால் அவன் உன்னுடைய பக்தன். அதனால் நம் இருவருடைய அருளும் சேர்ந்து அதிக பலத்தைப் பெறுகிறான். எனவே, அந்த பக்தர் வெற்றி பெறுகிறான் என்று கூற, உணர்ந்த ஆஞ்சநேயர், தன் பக்தனை வாழ்த்தி மறைந்தார்.