ஆடி வெள்ளியன்று வந்த நல்லபாம்பு: பெண்கள் வழிபாடு
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை அடுத்த, ஒட்டப்பட்டியில் வீடு கட்டுமான பில்லர் குழியில் இருந்து, ஆடி வெள்ளியான நேற்று மீட்கப்பட்ட நாகப்பாம்பை, அப்பகுதி பெண்கள் பூ தூவி வழிபட்டனர்.
அதியமான்கோட்டை அடுத்த, ஒட்டப்பட்டி பெருமாள் கவுண்டர் தெருவில், புதிய வீடு கட்டுமான பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது. இதற்காக, பில்லர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, கட்டுமான தொழிலாளர்கள் பில்லர் அமைக்க தோண்டப்பட்ட குழியில் நல்லபாம்பு ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். இத்தகவல் பரவியதும், அருகில் வசித்து வரும் பொதுமக்கள், கட்டுமான பணி நடக்கும் இடம் அருகே குவிந்தனர். இதுகுறித்து, பாம்பு பிடிக்கும் ஹரிமணி என்பவருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், பில்லர் குழியில் இருந்த, பாம்பை உயிருடன் பிடித்தார். அப்போது, மூன்று வயதுள்ள அந்த நாகபாம்பு படம் எடுத்துள்ளது. இதை கண்டு அங்கு கூடியிருந்த பெண்கள் ஆடி முதல் வெள்ளியான நேற்று தங்கள் பகுதியில் பிடிபட்ட நல்ல பாம்புக்கு மஞ்சள், குங்குமம் தூவி வழிபட துவங்கினர். பாம்பு பிடிபட்டது குறித்து, தர்மபுரி வனத்துறையினருக்கு ஹரிமணி தகவல் தெரிவித்தார். வனத்துறையினரின் ஆலோசனைப்படி, நல்லபாம்பை ஒட்டப்பட்டியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டனர்.