நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கழுக்குன்றம்:ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்மன், வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற சிவ தலமாக வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. நான்கு வேதங்கள் மற்றும் சமயகுரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக உள்ளது. இக்கோவிலில், சித்திரை திருவிழா அடுத்து, திரிபுரசுந்தரி அம்மன் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, 17ல் தாழக்கோவிலான பக்தவத்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மூன்றாம் நாளில், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய திரிபுர சுந்தரி அம்மன், மலைவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவுநாளான, 27ல் அம்மனுக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண கோலத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.