கோவில் நிலத்தை மீட்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
பல்லடம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பல்லடம் அங்காளம்மன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல்லடம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, ஒன்பது ஏக்கர் நிலத்தை, ஒருதரப்பினரின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:பல்லடம் அங்காளம்மன் கோவில், மிகவும் பழமையானது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபட்டு செல்கின்றனர். இக்கோவில், ஒரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, ஒன்பது ஏக்கர் நிலத்தை விற்க முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து அறநிலையத்துறை இணை மற்றும் உதவி ஆணையர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம். கோவில் நிலத்தை மீட்கவும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள், கோவில் நிலத்தை கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பல போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.