ஆடி அமாவாசை: சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
கீழக்கரை: சேதுக்கரை கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவு 3:00 மணியில் இருந்து பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளிமாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், விநாயகர் கோயிலின் முன்பு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதையொட்டி ஊராட்சி சார்பில் மருத்துவ, சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கடற்கரை ஓரங்களில் ஏராளமான சிறு கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. டூவீலர்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசசல் ஏற்பட்டது.
மூக்கையூர்: ராமாயணத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் அறுத்த இடமாதலால், மூக்கையூர் என பெயர் வழங்கப்படுகிறது. இங்குள்ள கடற்கரையில் அதிகாலை முதல் தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்து கடலில் புனித நீராடினர். மாரியூர்: பூவேந்தியநாதர் சமேத பவள நிறவள்ளியம்மன் கோயிலில் கடலாடி, சாயல்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செசய்தனர். அதிகாலை 4:00 மணி முதல் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அருகில் உள்ள கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினர். குளிர்பானம், அன்னதானம் மாலை வரை வழங்கப்பட்டது.
தீர்த்தாண்டதானம்: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் சர்வதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராமபிரான் இப்பகுதி வழியாக சீதையை தேடி இலங்கை சென்ற போது இங்கு தங்கினார். தாகம் ஏற்படவே, அகத்தியர் தீர்த்தம் உருவாக்கி கொடுத்ததால், சர்வதீர்த்தேஸ்வரர் ஆலயம் என பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகிறது. ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் பக்தர்கள் இங்குள்ள கடலில் புனித நீராடி வழிபடுவது வழக்கம். அதே போல் நேற்று ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடினர். சர்வதீர்தேஸ்வரர், பெரியநாயகிதாயார் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. இரவில் சுவாமி வீதி உலா நடந்தது.
தேவிபட்டினம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடி பின்பு நவகிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதல் காலை 10:30 மணி வரை, நவபாஷாண கடல்நீர் உள் வாங்கி காணப்பட்டதால் நவகிரகங்களை சுற்றிவர பக்தர்கள் சிரமமடைந்தனர். சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், செயல் அலுவலர் இளங்கோ உள்பட அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையிலான மீட்பு பணி வீரர்கள் நவபாஷாண கடலுக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.