மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பிரசாதம் வழங்கல்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பக்தர்களுககு பிரசாதம் வழங்கப்பட்டது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் அன்னதான திட்டம் செயல்பட்டு வந்தாலும் மதிய நேரத்தில் மிக குறைந்த அளவிளான பக்தர்களுக்கே அன்னதானம் வழங்கி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும், கோவில் உள்ள உள்ள பிரசாத கடைகளிலேயே பணம் கொடுத்து பிரசாதம் வாங்கி சாப்பிடும் நிலை இருந்து வந்தது.
கோவில் சார்பில் பிரசாதம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து முதன் முறையாக நேற்று முன்தினம் ஆடி அமாவாசையன்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களுக்கு தொன்னையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் திருவண்ணாமலை கோவில் உதவி ஆணையர் மோகன், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.