ஹிரோடைய்யா திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹிரோடைய்யா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா துவங்கியது. தொதநாடு சீமைக்கு உட்பட்ட, கடநாடு, ஒன்னதலை, கம்பட்டி, டி. மணியட்டி, பனஹட்டி மற்றும் கக்குச்சி ஆகிய கிராமங்களில் இவ்விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ’பனகுடிக்கு’ (வனக்கோவில்) விரதம் இருந்து பக்தர்கள் சங்கொலி எழுப்பி, ஊர்வலமாக சென்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, நடைத்திறக்கப்படும் இக்கோவிலில், முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசுமாட்டின் பாலும், வனப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனும், ஐயனுக்கு படையல் வைத்து, கல்லுடன் பிரம்பபை உரசி அங்கிருந்து வெளியேறி தீப்பொறியில் தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பக்தர்கள் கலாசார உடையணிந்து, ஐயனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். தொடர்ந்து, பனகுடியில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கிராமத்தில் உள்ள ஹிரோடைய்யா கிராமத்திற்கு திரும்பினர். விழாவின் முக்கிய நிகழ்வாக, ’ஹரிக்கட்டுதல்’ என்ற சிறப்பு பூஜை நடந்தது. வனப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில் இழையை நுாலாக திரித்து, தானிய வகைகளை கோர்த்து, ’ஹக்கபக்க’ கோவிலில் கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஹிரோடைய்யா கோவில் வளாகத்தில் உள்ள கல்துாணில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. ’இந்த சிறப்பு பூஜை நடத்துவதால், ஆண்டு முழுவதும் உணவு பஞ்சம் இருக்காது’ என, நம்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடந்த விழாவின்போது, படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன.