உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம், திருவாடானையில் ஆடித்திருக்கல்யாணம்

ராமேஸ்வரம், திருவாடானையில் ஆடித்திருக்கல்யாணம்

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது.ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 17 ல் கொடி ஏற்றத்துடன், ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது.

நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கார மேடையில் சுவாமி, பிரியாவிடையுடன் எழுந்தருளினார். பின், கோயிலுக்குள் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சல் ஆடும் வைபவம் முடிந்ததும், அலங்கார மண மேடைக்கு எழுந்தருளினார். பின் மணமேடை முன்பு கோயில் குருக்கள் யாக பூஜை நடத்தி, மந்திரம் முழங்க சுவாமி, அம்மனுக்கு திருமாங்கல்யத்தை கோயில் குருக்கள் அணிவித்து, ஆடித் திருக்கல்யாணம் இரவு 8.05க்கு நடந்தது. பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கோயில் பேஷ்கார் அண்ணாதுரை, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் மகேந்திரன், பலர் பங்கேற்றனர்.

திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஜூலை 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் திருமண அலங்காரத்துடன் மேடையில் காட்சியளித்தனர். முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு தீப, ஆராதனை நடந்தது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !