உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத வழிபாடு

மேலூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத வழிபாடு

மேலூர்: மழை பெய்து எல்ல வளமும் கிடைக்க வேண்டி ஆடு, சேவல்  மற்றும் கள்ளு(மது) படையல் இட்டு ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு விநோதமாக சாமி கும்பிட்டனர்.

மேலூர் அருகே வீரசூடாமணிப்பட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் சுவாமிக்கு ஆண்டு தோறும்  ஆடி மாதம் கள்ளு (மது)படையல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி, சுந்தரராஜபுரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் ஒன்று கூடினர். நேர்த்திகடன் வேண்டி நிறைவேறியவர்கள் 71 ஆடு மற்றும் 701 சேவல்கள் காணிக்கையாக செலுத்தினார்கள்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினார்கள். காணிக்கையாக வந்த ஆடு மற்றும் சேவலை ஐந்து கரை பாத்தியப்பட்டவர்கள் பெரிய கண்மாயில் வெட்டி ரத்தத்தை கண்மாயில் உள்ள தண்ணீரில் கரைத்தனர். அதனால் மழை பெய்து கண்மாய் நிறையும் என்பது நம்பிக்கை. அதனைத் தொடர்ந்து படையல் இட்டு சாமி கும்பிட்டனர்.

இதுகுறித்து பூசாரிவீரணன் கூறியதாவது: காணிக்கையாக வந்த ஆடு மற்றும் சேவலை அறுத்து நெருப்பில் வாட்டி, மண்பானையில் போட்டு அதன் மேல் வேப்ப மரத்தின்  இழையை போட்டு கறியை அவிப்போம். அதன் பிறகு அவித்த கறி மற்றும்  மது பாட்டில்(கள்ளு)களை  ஆண்கள் மட்டுமே படையல் செய்து சாமி கும்பிட்டோம். அதனைத் தொடர்ந்து ஆடு மற்றும் சேவல் காணிக்கை கொடுத்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக பெரியகுளம் அருகில் <உள்ள சக்கரை மாற்று பாறையில் உள்ள இஸ்லாமியர்களிடம் கிராமத்து சார்பில் பணம் கொடுத்து மொத்தமாக சக்கரையை வாங்கி கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினோம். மற்ற நாட்களில் குளத்தில் தண்ணீர் வற்றி இருந்தாலும்  காப்பு கட்டியதும்  மழை பெய்து கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டு தான் சமைப்போம். வேப்ப மரத்து இழையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பழமை மாறாமல் கள்ளு படையல் இடுவதால் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !