உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் குரு பூஜை

விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் குரு பூஜை

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை நேற்று நடந்தது. யானை வாகனத்தில் சுந்தரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார்.

சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார். அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் மீது, பண்களுடன். 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார். அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக,  கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.

சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடந்தது. பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார். சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர்,  கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார். அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !