கமுதியில் அரச மரத்திற்கும் வேம்புக்கும் திருக்கல்யாணம்
கமுதி: கமுதியில் விநாயகர், ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி 18 ஆம் பெருக்கு விழாவை முன்னிட்டு, வேம்புக்கும், அரச மரத்திற்கும் திருக்கல்யாணம் விழா நடந்தது. கமுதியில் விநாயகர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு வேம்பு மற்றும் அரச மரத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்து வேப்ப மரத்தினை சக்தியாகவும், அரசமரத்தினை சிவனாகவும் சித்தரித்து, வணங்கி திருமணம் நடத்தி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் எட்டுக்கண் பாலம் அருகே விநாயகர், ஆஞ்சநேயர் கோயிலில் வேம்பு, அரசு மரங்கள் ஒன்றாக இணைந்து வளர்ந்துள்ள இடத்தில் இத்திருவிழா நடந்தது. கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள கிரமங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கமுதி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரபூபதி அன்னதானத்தை தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.